சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுய தொழில் அமைத்து தருவதாக கூறி தங்களிடமிருந்து ரூ. 2 கோடி வரை மோசடி செய்த எஸ்.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சையது சுலைமான் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கரோனா ஊரடங்கின்போது வீட்டிலிருந்தபடியே சுய தொழில் அமைத்து தருவதாக கூறி சமூக வலைதளங்கள், நாளிதழில் எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று வந்தது.
இதைப் பார்த்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சையது சுலைமான் என்பவரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது இந்தியா முழுவதும் மளிகை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துவருகிறோம். மளிகை பொருட்களை, தான் தருவதாகவும், அதனை 500 கிராம்,1 கிலோ எடைகளில் பேக்கிங் செய்து கொடுத்தால் அதற்கேற்ப மாதம் 25 ஆயிரம் ரூபாய்வரை வருவாய் ஈட்டலாம் என தெரிவித்தார். மளிகை பொருட்கள் வைக்க குடோன் வாடகைக்கு கொடுத்தால் 1 லட்சம் ரூபாய்வரை ஈட்டலாம் எனவும் அவர் கூறினார்.
ஆனால் அதற்கு டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்வரை தர வேண்டும் என்று கூறினார். இதனை நம்பிய பலர் அந்த நிறுவனத்தில் 25 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய்வரை பணத்தை கட்டினோம். ஒரு மாதம் மட்டும் பணிக்கான சம்பளத் தொகையை சுலைமான் வழங்கினார். அதன் பின் மளிகை பொருட்களும் வீட்டிற்கு வரவில்லை. பணிக்கான சம்பள தொகையையும் சுலைமான் தரவில்லை.