சென்னை: அண்ணாநகர் மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் முறைகேடான ஆவணப்பதிவுகள் மூலம் தனியாரால் அபகரிக்க முயன்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ. 110 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அண்ணாநகர் சார்பதிவக எல்லைக்குட்பட்ட 10.03 ஏக்கர் நிலத்தில் 1.49 ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருந்தது.
அண்ணாநகர் சார்பதிவக எல்லைக்குட்பட்ட நிலம்
இதுகுறித்து கடந்த 2000ஆம் ஆண்டு சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையர் விசாரணை மேற்கொண்டு முறைகேடாக தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டா 2002 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு இவ்விவரங்களை மறைத்து அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியாரால் மோசடியான ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு, நில அபகரிப்பு முயற்சி நடைபெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டு அவ்விவரம் குறித்த அப்போதைய பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பதிவு அலுவலர் மூலம் மோசடியான ஆவணப்பதிவு தடுக்கப்பட்டு, ஆவணப் பதிவு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், சார்பதிவக ஆட்சி எல்லையை மாற்றி காஞ்சிபுரம் எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியாரால் முறைகேடாக ஆவணப் பதிவு மேற்கொள்ள 5.12.2020 அன்று ஆவணத்தை அனுமதித்து பதிவு செய்ய முயற்சி நடைபெற்றது. ஆவணம் பதிவாகும் முன்னரே நடக்க இருந்த இம்முறைகேடு கண்டறியப்பட்டு, ஆவணப் பதிவு தடுக்கப்பட்டு, நிலுவையில் வைக்கப்பட்ட ஆவணப் பதிவு மறுக்கப்பட்டது.
இதனால் தனியாரால் நில அபகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அரசு சொத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலம் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் எவ்வித பரிவர்த்தனையும் மேற்கொள்ளக்கூடாது என வில்லங்க சான்றில் குறிப்பு சேர்க்கப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலம் மீட்கப்பட்டுள்ளது.
முகப்பேர் பகுதியில் உள்ள நிலம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நில எடுப்பு செய்யப்பட்ட கொன்னூர் சார்பதிவக எல்லைக்குட்பட்ட முகப்பேர் பகுதியில் 0.44 ஏக்கர் நிலம் மற்றும் 2.61 ஏக்கர் நிலங்கள் மீது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சார்பதிவக ஆட்சி எல்லையை மாற்றி வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியாரால் முறைகேடாக ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள கடந்த 2015ஆம் ஆண்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
அப்போது, பணியில் இருந்த வேளச்சேரி சார்பதிவாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பணம் செலுத்தி ஆர்ஜிதம் செய்திருந்த நிலத்தை முந்தைய 25 உடைமைதாரர்களிடமிருந்து நேரிடையாக வேறு இரு தனியார் பெயரில் ஆவணப்பதிவுகள் செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட இரு ஆவணங்களை ஆரம்ப நிலையிலேயே பதிவு மறுக்காமல், அனுமதித்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்து வந்தார்.
இவற்றைப் பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 30.10.2017 அன்று வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த சார்பதிவாளரால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எவ்வித தகவலுமின்றி சட்ட கருத்துரை மட்டும் பெற்றுக் கொண்டு தனி நபர்களின் பெயரில் ஆவணப் பதிவுகள் செய்யப்பட்டன.
திமுக அரசு நடவடிக்கை
தற்போது, புதிய அரசு பதவியேற்ற பின்பு அரசுக்கு இது குறித்த தகவல் தெரிந்த பின்னர், மேற்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் மேற்கொண்டு பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது எனவும் மேற்படி நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலம் என்றும் வில்லங்க சான்றில் குறிப்பு சேர்க்க பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
தவறான ஆவணப் பதிவை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த ஆவணப்பதிவுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவியல் நடவடிக்கை
இதற்கிடையில், இந்த முறைகேடான ஆவணங்களை பதிவு மறுக்காமலும், உரிய நடவடிக்கை தொடராமலும் உள்நோக்கத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைத்திருந்த முந்தைய வேளச்சேரி சார்பதிவாளர் மீதும், நிலுவையிலிருந்த இந்த முறைகேடான ஆவணங்களை கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்த பதிவு அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மோசடி ஆவணத்தை பதிவு மறுப்பு செய்யாத முந்தைய வேளச்சேரி சார்பதிவாளர் சுயவிருப்ப ஓய்வில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது ஓய்வூதிய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பதிவு மறுப்பு செய்யாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த மோசடியான ஆவணங்களைப் பதிவு செய்த சார்பதிவாளர் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கையும் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு