சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய குள்ளா என்கிற விஷ்வா என்கிற விஸ்வநாதன். இவர் மீது 5 கொலை உள்பட 25 வழக்குகள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தின் ஏ+ கேட்டகிரி சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு 25 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த விஷ்வா, கடந்த ஆகஸ்ட் மாதம் பிணையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். அப்போது அவர் சில நாட்களாக கையெழுத்திடாத காரணத்தால் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் திருப்பாஞ்சூர் காட்டுப்பகுதியில் விஷ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், விஷ்வாவை சரணடைய சொன்னதாகவும், அப்போது தனிப்படைக் காவலர்களான வாசுதேவன் மற்றும் ரமேஷை ரவுடி விஷ்வா தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ரவுடியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிப்படை உதவி ஆய்வாளர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் விஷ்வாவை மார்பில் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ரவுடி விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த காவலர்கள் காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது போலி என்கவுண்டர் நடந்தால், அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் தயாளன்தான் காரணம் என்று என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.