சென்னை ராஜமங்கலம் கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் ரவுடி ரமேஷ் (23). இவரது மச்சான் அபினேஷ் (24). இவர்கள் இருவரும் புறா கூண்டு செய்யும் பணி செய்துவந்துள்ளனர். இவர்களது மாமியாரின் வீடு மாதவரம் பகுதியிலுள்ள வஜ்ரவேல் பகுதியில் இருந்ததால் அடிக்கடி இருவரும் அங்கு சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் அங்கே செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த அலி மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது.
இச்சூழலில், நேற்று (ஜூன் 12) இரவு அபினேஷ் வழக்கம்போல் வஜ்ரவேல் தெரு வழியாக வீட்டிற்கு வரும்போது அலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அபினேஷ், ரமேஷ், அவரது நண்பர் சரண் ஆகியோருடன் அலி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது கொளத்தூர் ஓடை பகுதி அருகே அலியின் நண்பர்களான வெல்டிங் சுரேஷ், சரவணன், பாரதி ஆகியோர் அவர்களை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் மூவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்தக் காயங்களுடன் அபினேஷும் சரணும் தப்பியோடியுள்ளனர்.