விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் சென்னை கொரட்டூரில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க முயன்றனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் பிரபுவை அரிவாளால் தாக்கிவிட்டு மணிகண்டன் தப்பிக்க முயன்றபோது, என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
தாதா மணிகண்டன் என்கவுன்ட்டர்: மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு - dhadha manikandan encounter
சென்னை: விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக பொதுத்துறை முதன்மை செயலர் இன்னும் நான்கு வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களை தொந்தரவு செய்து வரும் ரவுடிகளும் கதிகலங்கி போயுள்ளனர். இதனிடையே, விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய தலைவர் மீனாகுமாரி, பொதுத்துறை முதன்மை செயலர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய டி.ஜி.பி இன்னும் வாரங்களில் இச்சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.