சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் தனியார் கேஸ் ஏஜென்சி இயங்கி வருகிறது, நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் அலுவலகத்தை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கபட்டிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதே பகுதியில் உள்ள காமராஜபுரம் தனபால் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரி நூலகத்தின் ஊழியர் செந்தில் (50) என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகாக கடலூர் சென்றுள்ளார்.
இதனையடுத்து செந்தில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையறிந்து , சென்னை திரும்பிய செந்தில், வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் , ஐந்து சவரன் தங்க நகையும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சேலையூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் இருவேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இட்த்தில் ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமாரக்களை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.
ஒரே நாளில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.