சென்னை: காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில், கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்ட "ஈசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்" செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 9) இரவு வங்கி பணியாளர், வழக்கம்போல் வங்கியை மூடிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று (செப்.10) அதிகாலை திருச்சூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட வங்கி பணியாளர்கள், காசிமேடு கிளை மேலாளரிடம் வங்கியில் அபாயமணி ஒலிப்பது குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயமணி - ஓட்டம் பிடித்த கொள்ளையர்கள்
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய சோதனையில், வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. அப்போது அபாயமணி சத்தம் ஒலிக்கத் தொடங்கியதையடுத்து, கொள்ளையர்கள் தப்பி ஓடியதும் தெரியவந்தது.
தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு! இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வாயில் மறைத்துவைத்து தங்கம் கடத்தல்: சிக்கிய உஸ்பெகிஸ்தான் பயணிகள்!