சென்னை:வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில் 2- நாட்கள் பெய்த மழைக்கே சென்னை நகரில் உள்ள பல சாலைகள் சேதமடைந்துள்ளது.
சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பரவலாகப் பெய்து வருகிறது. சென்னையில் சென்ற வாரங்களில் விட்டு விட்டு மழை வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மழையானது பெய்தது. இரண்டு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் புறநகரில் மழையால் பல சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாகத் தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை, அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை 1-ஆவது பிரதான சாலை, மூன்றாவது பிரதான சாலை, பட்டரவாக்கம் சாலை, அதிப்பட்டு சாலை, போன்ற சாலைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பத்தூர் பகுதியில் வாகன ஓட்டிகள் தெரிவித்தது, "அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கிண்டி கோயம்பேடு, போரூர் செல்ல இந்த சாலையைத் தான் பயன்படுத்துவோம். தற்போது, மழையால் இந்த சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டும் குழியுமாக இருப்பதால், சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. கடந்த, அதிமுக ஆட்சியிலிருந்தே இந்த சாலைகளில் பிரச்சனைகள் இருந்தது தற்போது திமுக ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறது. பேருக்கு என்று சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு நாள் மழைக்கே சாலைகள் சில பகுதிகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார்கள்.