சென்னை: தமிழகத்தில் மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் ஐந்து விழுக்காடு உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, 15 ஆண்டுகளில் மொத்த வாகனச் செலவில் 8 விழுக்காடு வீதத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்படுகிறது.
மேலும் 1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 விழுக்காடு வரியும், 1 லட்சத்துக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 விழுக்காடு சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 15 விழுக்காடு வரியும் விதிக்கப்படுகிறது.
புதிய திட்டப்படி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும். 20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு வாகனத்தின் விலையில் 20 விழுக்காடு வரி விதிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2022-23ஆம் ஆண்டில் ரூ.6,674.29 கோடியாக இருந்த போக்குவரத்துத் துறையின் ஆண்டு வருவாயில், மேலும் ரூ.1,000 கோடி வருவாயை வரித் திருத்தம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளரின் சமீபத்திய கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக் கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில், சாலை வரி திருத்தம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ.11 லட்சம் விலையுள்ள காரை, 1 கோடி ரூபாய்க்கு அதே வரி வரம்பில் வைப்பது நியாயமற்றது. இப்போது, 20 லட்ச ரூபாய்க்கு மேல் கார் வாங்குபவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் 150 சிசி பைக்குகளை வாங்க 7000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை கூடுதல் செலவாகும்" என்று தெரிவித்தார்.