சென்னை :சென்னை கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் 14 நிறுவனங்களை மாநகராட்சி அலுவலர்கள் இன்று அகற்றினர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் வெங்கடேசன், வடசென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் காவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அப்பகுதிக்கு சென்று காலை 9 மணி அளவில் ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி வாகனம் மூலம் இடித்து தள்ளும் பணியை தொடங்கினர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் முன்னதாக, இப்பகுதியில் செயல்பட்டு வந்த சுண்ணாம்புக்கல் தயாரிப்பு நிறுவனம், கல், சிமெண்ட், மண் விற்பனை கடைகள், இரும்பு பட்டறைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு இடத்தை காலி செய்யுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று எச்சரித்ததையடுத்து, ஆறு மாதங்களுக்குள் காலி செய்து விடுவதாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் வழங்கப்பட்ட காலக்கெடுவை தாண்டியும் கடைகளை காலி செய்யாததால், இன்று அப்பகுதியிலுள்ள கடைகள் அலுவலர்கள் முன்னிலையில் இடித்து தள்ளப்பட்டன.
இதையும் படிங்க:ஆவடியில் நடைபாதைக் கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை!