தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சாலை அமைக்கும் பணி: விடிய விடிய ஆய்வு செய்த மேயர் பிரியா - விடிய விடிய சாலைப்பணி குறித்து ஆய்வு

சென்னையில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணிகளை விடிய, விடிய மேயர் பிரியா ஆய்வு செய்தார்.

சாலை அமைக்கும் பணி மேயர் ஆய்வு
சாலை அமைக்கும் பணி மேயர் ஆய்வு

By

Published : Mar 11, 2023, 2:52 PM IST

Updated : Mar 11, 2023, 3:13 PM IST

சென்னை:தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் (2021-22) கீழ், ரூ.172.70 கோடி மதிப்பில் 226 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 1 முதல் 15 மண்டலங்களில் நடைபெற்று வருகின்றன. மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 1,2,3,5,11,13 மற்றும் 14ல், உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணி, மண்டலம் 3,4,6,8,9,10,13 மற்றும் 15ல் பேருந்து வழித்தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் (2022-23) கீழ், 1,2,3,4,6,10,12,13,14,15 ஆகிய மண்டலங்களில் உள்ள 370 உட்புற தட தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவில் நடைபெறுகின்றன. ரூ.172.70 கோடி மதிப்பில் 226 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் அமைக்கும் பணியை மேயர் பிரியா இன்று (மார்ச் 11) ஆய்வு செய்தார். அதிகாலை 1.30 மணியளவில் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு 110க்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலை அமைப்பதற்காக பழைய சாலையை அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா நகர் மண்டலம் வார்டு 101-க்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் பிரதான சாலை வரை போடப்படும் சாலைப்பணிகளையும் ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்படும் சாலைகளை தரமானதாகவும், விரைவாக முடித்திடவும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார். ஆய்வின் போது நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 16 பள்ளிக்கட்டங்கள் மற்றும் விக்டோரியா பொதுக்கூடத்தை புனரமைப்பதற்காக ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9-ஆம் வகுப்பு மாணவி செய்த சம்பவம்!

Last Updated : Mar 11, 2023, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details