செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஆகவே, பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறும் TNSTC இணையதளத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதைத்தொடர்ந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும், இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் மூலமாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் இயக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றன.