சென்னை:கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர் வர்ஷா (22). இவரது தம்பி வினய் (15), பத்தாம் வகுப்புப் படித்துவந்தார். இவர்கள் இருவரும் இன்று (டிசம்பர் 27) இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி அருகே உள்ள அவர்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர்.
வர்ஷா இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். வினய் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் செல்லும்போது எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க வர்ஷா பிரேக் பிடித்துள்ளார்.
இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் வினய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண்முன்னே தம்பி உயிரிழந்ததைக் கண்டு வர்ஷா கதறி அழுதது காண்போரைக் கண் கலங்கவைத்தது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று வினய் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மதன்கோபாலை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மற்றொரு கட்டடமும் சேதம்; தொடரும் மீட்புப் பணி