கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வேரி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இணைந்த 18 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். இதனால் உமா மகேஸ்வரி எம்எல்ஏ பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு விளாத்திக்குளம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் போட்டியிட வாய்ப்பு கேட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சின்னப்பன் அதிமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சின்னப்பனை எதிர்த்து போட்டியிட்ட ஜி.வி.மார்க்கண்டேயன் 27 ஆயிரத்து 456 வாக்குகள் பெற்று தனது தனி செல்வாக்கை காட்டி அதிமுகவை அதிர வைத்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜி.வி.மார்க்கண்டேயன், அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.