சென்னை: அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மக்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் என பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறியிருந்ததனர்.
இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ததில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு நிர்வாகிகள் தலைமறைவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 22 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், ஆர்கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாக இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்து அவர்களை பிடிப்பதற்கு ரெட் கார்னர் நோட்டீஸை வழங்கினர்.
அதன் அடிப்படையில் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜசேகர் இரண்டு வாரத்திற்குள் சென்னை அழைத்து வரப்படுவதற்கான நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகரும் பாஜக நிர்வாகியமான ஆர் கே சுரேஷ் 12.5 கோடி கொடுத்ததாக முன்னதாக கைது செய்யப்பட்ட ரூசோ என்பவர் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அவரை விசாரனைக்கு ஆஜரகும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகர் ஆர் கே சுரேஷ் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.