ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி சர்வதேச மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை இன்று உணர்ந்துள்ளனர். அந்தவகையில் மருத்துவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மருத்துவர்கள் தின தொடர்பாக வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் டாக்டர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மருத்துவர்கள் எந்த அளவிற்கு இன்றியமையாதவர்கள் என்பதை காலம் நமக்கு உணர்த்தியுள்ளது. போர் காலங்களில் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எப்படி தாய்நாட்டிற்காக போராடுகிறார்களோ அதேபோன்று இருக்கும் இன்றைய சூழ்நிலையில் மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி மக்களை காப்பாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் ஈடு-இணையே இல்லை. மேலும், இந்த மருத்துவர் தினத்தில் ஒரு மருத்துவமனையை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உங்கள் அனைவருக்கும் தெரியும். மிகவும் பழமையான மருத்துவமனை வடசென்னையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக அதிகமான கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் மருத்துவமனை என்றால் அது மிகையல்ல, இந்த மருத்துவமனையோடு மற்ற மருத்துவமனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த மருத்துவமனையில் உயிரிழப்புகள் மிகவும் குறைவு.
நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பாலாஜிக்கு மருத்துவர்கள் தினத்தில் எங்கள் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்". இவ்வாறு அந்த வீடியோவில் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.