கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவை நேற்று (மே.31) முதல் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வைத்து நடமாடு மளிகைப் பொருள்கள் வாகன சேவையை ஆர்கே நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மளிகைக் கடை வியாபாரிகள் பொதுமக்களிடம் தொலைபேசியில் ஆர்டரை பெற்றுக் கொண்டு, அவர்கள் வீடுகளுக்கே சென்று பொருள்கள் கொடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களை அருகில் உள்ள அனுமதி பெற்ற மளிகைக் கடை வியாபாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
நேற்று (மே.31) முதல் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், முட்டை, ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வீட்டிலிருந்தே ஆர்டர் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும் என்று மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர்.