'ரிவால்டோ' என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த யானை சுமார் 35 முதல் 40 வயதுடைய ஒரு காட்டுயானை ஆகும். காட்டுயானையாக இருப்பினும், பல ஆண்டுகளாக மசினகுடி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றித் திரிந்துள்ளது. அவ்வப்போது, மக்களின் வசிப்பிடப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தது.
ஆனால், ஊருக்குள் காட்டுயானை சுற்றித்திரிவது சில உள்ளூர்வாசிகளுக்கு அச்சத்தையும் நெருடலையும் ஏற்படுத்தியதால், வனத்துறையினர் கடந்த மே 5 ஆம் தேதி ரிவால்டோவை பிடித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காட்டில் ஒரு மரக்கூண்டில்(Kraal) அடைத்து வைத்தனர்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, தலைமையிலான குழு இந்நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்தது. இக்குழுவில் தலைமை வன உயிரினக்காப்பாளர் சேகர் குமார் நீரஜ், உட்பட பல வனத்துறையினர் இடம் பெற்றிருந்தனர்.
யானை வனத்தில் விடுவது இதுவே முதன்முறை
தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, இக்குழுவானது ரிவால்டோ யானையை வனத்திற்கு மீள அனுப்பி மறுவாழ்வளிக்க முடிவு செய்தது. தமிழ்நாட்டில் பிடிபட்ட காட்டு யானையினை மீண்டும் வனத்திற்குத் திரும்ப அனுப்பி மறுவாழ்வளிப்பது இதுவே முதன்முறையாகும்.
இக்குழு கடந்த 25 நாட்களாக இதற்கென மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, கடந்த 48 மணி நேரத்தில் சிறப்பான முறையில் முன் ஏற்பாடுகளைச் செயல்படுத்தி முடித்து காட்டியுள்ளனர். இந்த யானையை வனப்பகுதியில் விடத் தேர்வு செய்துள்ள இடம் அதற்கு மிக உகந்ததும், நல்ல தீவன உணவுகள் கிடைக்கக் கூடியதுமான செழிப்பான வனப்பகுதி ஆகும்.
அடர்ந்த வனத்தில்
இப்பணியின் போது ரிவால்டோ யானைக்கோ அல்லது குழுவுக்கோ எவ்விதக் காயமுமின்றி, முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப் பகுதிக்கு ரிவால்டோ கொண்டு செல்லப்பட்டது.