சென்னை:நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படும் இடர் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் நிலக்கரித் தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.
மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் கூறிவந்தாலும்கூட, ஒன்றிய மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர்களை அழைத்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும்.
தட்டுப்பாட்டுக்கு காரணம்
வெளிநாடுகளில் உற்பத்திக் குறைவு காரணமாக நிலக்கரி விலை கணிசமாக உயர்ந்திருப்பதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நிலக்கரி உற்பத்தியும், உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லும் பணியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும்தான் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. நிலைமையை சமாளித்துவிட முடியும் என்று ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் போதிலும், கள நிலைமை வேறு விதமாக உள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 135 அனல்மின் நிலையங்களில், சுமார் 80%, அதாவது 106 அனல் மின் நிலையங்களில் இருப்பில் உள்ள நிலக்கரி, ஐந்து நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என ஒன்றிய மின்சார ஆணையத்தின் இணையதள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அடுத்த சில நாள்களில்
அதுமட்டுமின்றி, மராட்டியத்தில் 13 அனல் மின் நிலையங்களும், பஞ்சாபில் மூன்று அனல் மின் நிலையங்களும் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மூடப்பட்டிருக்கின்றன. கேரளம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல மாநில அரசுகள் அடுத்த சில நாள்களில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. இதுதான் எதார்த்தமாகும்.
தமிழ்நாட்டில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர், அதனால் தமிழ்நாட்டில் ஒரு வினாடிகூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும்கூட, கள நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழ்நாடு அரசு தயாராக இருக்க வேண்டும்.