சென்னை: குரோம்பேட்டையில் உள்ள திருநீர்மலை சாலையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று (ஏப்.12) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று கரோனா நோயாளிகளே இல்லை. கரோனா தொற்று சிகிச்சை பெறுபவர்கள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்படாமல் பூஜ்ஜியம் என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. 30 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் நேற்று 22 பேருக்கு மட்டும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனா பூஜ்ஜியம் என்கிற நிலை கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி கரோனா பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்தாலும் அதனை ஆய்வு செய்து கண்டறிய தமிழ்நாடு அரசிடன் உயர்தர வசதிகள் உள்ளன. எவ்வகை கரோனா வந்தாலும் சமாளிக்க முடியும். நாளை (ஏப்.14) முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.365 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனாவிற்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு மற்றும் தமிழ்நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 2099 புதிய தீவிர சிகிச்சை மையத்தை திறந்து வைக்க உள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ஒருவரும் இல்லை; பூஜ்ஜிய எண்ணிக்கையை சாதித்துக்காட்டிய சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை!