சென்னை:மாநகரில் வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு இன்று (நவ. 4) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில், கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. சென்னையில் சுமார் 62 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில், அதிகமாக இருப்பது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் தான். மேலும், ஆண்டுக்கு 6 சதவீத வாகனங்கள் விற்பனையாகின்றன.
அதிக நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தமிழகத்தில் சென்னை தான் இருந்து வருகிறது. மேலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, '2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.61 லட்சமாக உயர்ந்துள்ளது. சாலை விபத்துகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்கு அதிவேகமாக செல்லும் வாகனங்கள் காரணமாக இருந்து வருகின்றன' என அதில் குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினர் இதனைக் கருத்தில் கொண்டு வெளியிட்ட அறிக்கையில், '30 நவீன ‘ஸ்பீடு ரேடாா் கன்’ கருவிகளை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தி உள்ளனர். சென்னை காவல்துறை அறிவிப்பின்படி, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்கு பதியப்படும்.
இருசக்கர வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், காா், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம்.
அதேவேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்லலாம். இந்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!