சென்னை:பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அக்டோபர் 19 அன்று வெளியிட்டது. அதன்படி பல்வேறு தரப்பிலான விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
- முதல் முறை செய்யும் சாலை விதிமீறலுக்கு ஒரு அபராத கட்டணமும், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் கூடுதலான ஒரு அபராதமும் விதிக்கப்படும்.
- உதாரணமாக, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.1,000 அபராதமும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படும்.
- ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்வோருக்கு இனி ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.
- சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு முதல் முறை 500 ரூபாயும், இரண்டாவது முறை 1,500 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
- பைக் ரேஸ்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.5,000, இரண்டாவது முறை ரூ.10,000 என அபராதமாக வசூலிக்கப்படும்.
- சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வோருக்கு முதல் முறை 500 ரூபாயும், இரண்டாம் முறை 1,500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.
- ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், 18 வயதிற்குட்பட்டோர் வாகனம் ஓட்ட அனுமதித்தாலோ ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.
இதுதொடர்பான அரசாணை அக்டோபர் 19 அன்றே வெளியிடப்பட்ட நிலையில், கணினி சேவையகத்திலும், இ-செலான் எந்திரங்களிலும் புதிய கட்டணங்களை பதிவு செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால், இதுவரை பழைய அபராதத் தொகையே போக்குவரத்து காவல்துறையினரால் வசூலிக்கப்பட்டு வந்தது.