அரசு புறம்போக்கு, கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் எனக் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை இருப்பதாகவும் இதை ரத்து செய்யக் கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அரசு பதிலளிக்க நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அமர்வு உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் துணை செயலர் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு, கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, என்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு, கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.