சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பொது தீட்சிதர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதிகளில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் எந்த அனுமதியுமின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, பொது தீட்சிதர்கள் குழுவின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, நடராஜ் தீட்சிதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சிதர்கள் குழு மறு ஆய்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில், "நடராஜ் தீட்சிதர், கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத இந்து சமய அறநிலையத் துறையினருடன் சேர்ந்து கொண்டு கோயிலின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், கோயிலின் நிர்வாகத்திற்கு எதிராகவும் செயல்பட்டதால் பொது தீட்சிதர் குழுவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.