சென்னை: அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் அரசுத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறையின் சார்பில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது, அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புதல், மாணவ- மாணவியர் விடுதிகள் கட்டுதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
அரசு பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்திட முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் குறைபாட்டை போக்கிட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் அவர்கள் சொந்த தொழில் தொடங்க மானியம் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் நடவடிக்கைகள், 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திடவும், சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தையும் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் ஏற்படுத்துவது குறித்தும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் பொருளாதார வளர்ச்சி உதவிகள் தாமதமின்றி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தைத் துரிதப்படுத்தவும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நிதியுதவிகள் தாமதமின்றி பயனாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளைக் கண்டறிந்து, பயிற்சி அளிப்பது குறித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான உதவி உபகரணங்களைத் தாமதமின்றி வழங்கிட உத்தரவிட்டார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்போட்டியினை சிறப்பாக நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பொதுத்துறை சார்பில் இலங்கைத் தமிழர் முகாம்களில் கட்டப்படும் புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளை குறித்த நேரத்தில் முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், முதல்வரின் முகவரித் துறையின் சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சரின் உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்களின் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், சட்டத்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் முன்னோடி திட்டங்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூன் 7) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, பொதுத் துறை, சட்டத்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, முதல்வரின முகவரி, நிதித்துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: அரசாணை அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றுள்ளதா? - அலுவலர்களிடம் முதலமைச்சர் கேள்வி