தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் யாருக்கானது? - புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டும் ஏ.கே. ராஜனின் அறிக்கை - Admission rate

நீட் தேர்வு நடைமுறைக்குப் பின்னர் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கை, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

நீட் விவகாரம்
நீட் விவகாரம்

By

Published : Sep 21, 2021, 7:47 AM IST

Updated : Sep 21, 2021, 10:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஏ.கே. ராஜன் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்தக் குழுவினர் 33 நாள்களில் ஆய்வை முடித்து, அது தொடர்பான அறிக்கையை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

சுகாதாரத் துறை இணையதளத்தில் ஏ.கே. ராஜன் அறிக்கை

அப்போது இது குறித்து பேசிய ஏ.கே. ராஜன், “அனைத்து அம்சங்களையும் அறிக்கையில் கொடுத்துள்ளோம். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதகங்களே அதிகம் எனப் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்துசெய்வதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை, நேற்று (செப். 20) தமிழ்நாடு சுகாதாரத் துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் முகப்பு

மொத்தமாக 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், நீட்டிற்கு முன்பும், பின்பும் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த அரசுப் பள்ளி, தமிழ் வழி பயின்றவர்கள் சேர்ந்த விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேல்நிலையில் மாநில பாடத்திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை குறைவு

அதில், “நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்துசெய்ய தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதிசெய்யும்.

மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும். தமிழ்நாடு மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNSBSE) கீழ், கடந்த பத்து ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை மேல்நிலைக் கல்வியில் (HSC) அதிகரித்துவந்தது.

பின்னர் 2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நீட் தேர்வுக்குப் பின்னர், 2020ஆம் ஆண்டு வரை அதன் எண்ணிக்கை 12.7 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 322 பேர் என்ற அளவில் மாணவ, மாணவியரின் விகிதம் குறைந்துள்ளது.

எண்ணிக்கையில் மாற்றமில்லா தனியார் பள்ளிகள்

குறிப்பாக தமிழ்நாடு மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வுக்குப் பின்னர் 24.8 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு மாறாக இதே காலகட்டத்தில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்களின் எண்ணிக்கையானது 8.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தமிழ், ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களின் விகித அட்டவணை

கடந்த 2016ஆம் ஆண்டு வரை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதமானது நிலையான வளர்ச்சியில் இருந்துள்ளது. அவை நீட் தேர்வுக்குப் பிந்தைய காலத்தில் 18.5 லிருந்து 14.1 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர் எண்ணிக்கையை எந்த மாற்றமுமின்றி தக்கவைத்துக் கொண்டுள்ளன.

நீட் தேர்வுக்குப் பின்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழிக் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையானது, 56 விழுக்காட்டிலிருந்து 69.53 ஆக உயர்ந்தது. தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கையோ 14.44 விழுக்காட்டிலிருந்து 1.7 ஆக குறைந்துள்ளது.

குறைந்தபட்ச இடங்களும் இழப்பு

2010 - 2011ஆம் ஆண்டில், தமிழ் வழியில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் இணைந்தோரின் விகிதம் கிட்டத்தட்ட 20 விழுக்காடு ஆகும். 2020 - 2021ஆம் ஆண்டில் இது வெறும் இரண்டு விழுக்காட்டிற்கும் கீழே வந்துவிட்டது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு எம்பிபிஎஸ் படிப்புகளில் மாணவ, மாணவியரின் சேர்க்கை விகிதத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன்பு ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் அதிகளவு மருத்துவப் படிப்பு இடங்களைப் பெற்றிருந்தாலும், அவர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் குறைந்தபட்ச பங்கேனும் பெற்றிருந்ததையும் கவனிக்க முடிகிறது.

நீட் தேர்வுக்குப் பின்னர், அந்தக் குறைந்த இடங்களும் இழக்கப்பட்டுள்ளன. நீட்டுக்குப் பின்னர் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் பங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆங்கில வழிக் கல்வி கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'தீர்ந்தது பெற்றோரின் வேதனை; அரசுப் பள்ளி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் ஸ்டாலின்'

Last Updated : Sep 21, 2021, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details