சென்னை:எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று (நவ. 12) செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது, "காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுவதுமாகக் கரையைக் கடந்திருக்கும் நிலையில், ஓரளவு மழை குறைந்துள்ளது. சென்னையில் சாலைகள், குடியிருப்புகளில் தேங்கி இருக்கும் நீரை மோட்டார் பம்புகள் மூலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வெளியேற்றிவருகின்றனர்.
சென்னையில் 44 முகாம்களில் இரண்டாயிரத்து 699 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28.64 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 259 முகாம்களில் 14 ஆயிரத்து 135 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் திறமையாகக் கையாண்டுள்ளார்.
ஓரிரு நாள்களில் இயல்புநிலை திரும்பும்
2015ஆம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பில் 124 பேர் உயிரிழந்தனர். இம்முறை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2015இல் இரண்டாயிரத்து 218 கால்நடைகள் உயிரிழந்தன. தற்போது 834 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கடந்த முறை 31 ஆயிரம் குடிசைகள் மழையால் சேதமடைந்தன, இந்த முறை இரண்டாயிரத்து 284 குடிசைகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள், பாதிப்புகள் குறைந்ததற்கு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலமைச்சரின் ஆலோசனைகள்தாம் காரணம். அணை, ஏரிகளில் உபரி நீர் படிப்படியாக அதிகரித்து திறந்துவிடப்பட்டது. இன்னும் ஓரிரு நாள்களில் சென்னை இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.
இதுவும் ஒரு பாடம்
டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கிட அமைச்சர்கள் குழு நேற்று இரவே அங்கு சென்றுள்ளது. இந்த மழையும் எங்களுக்கு அனுபவ ரீதியான ஒரு பாடம்தான். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் சேவைக்கு எப்போதும் தயாராக உள்ளோம்.
2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் பாதிக்கப்பட்டபோது இருந்த அலுவலர்களைக் கொண்டே இம்முறை திறமையாக முதலமைச்சர் செயல்பட்டுள்ளார். மழை ஓய்ந்தபின் ஒன்றியக் குழு ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கவுள்ளோம்.
அடுத்த புயல் வருவதற்கான அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை. அப்படி வந்தால் அதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்றங்களில் அரசின் சார்பில் ஆஜராக 155 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு