இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவை, ரயில், பேருந்து போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்பட்டன.
ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வங்க தேசம், ஃபிரான்ஸ் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ’வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், பக்ரைனிலிருந்து 153 இந்தியா்கள் சிறப்பு மீட்பு விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 4) இரவு வந்தடைந்தனர். அவர்களில் கா்நாடகாவைச் சோ்ந்த ஐந்து போ் வாகனம் மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனா். துபாயிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் மூலம்175 பேர் நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தனர். .
சென்னை வந்த இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை, சுங்கப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இவர்களை அரசு பேருந்து மூலமாக சென்னையில் உள்ள கல்லூரி, ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, ரஷ்யாவில் சிக்கித் தவித்த இந்தியாவைச் சோ்ந்த மருத்துவ கல்வி மாணவர்கள் 100 போ் மாஸ்கோ நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானத்தில் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனா்.
இவா்களை அந்த கல்வி நிறுவனமே அரசின் சிறப்பு அனுமதி பெற்று தனி சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வந்ததால், சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள், அரசின் இலவச தங்குமிடங்கள் அளிக்கப்படவில்லை. இதையடுத்து அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை நகர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.