மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தென்கரை என்ற கிராமத்தில் அண்மையில் 2.66 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பஞ்சமி நில மீட்பு சாத்தியமாகியுள்ளது. சிறிய வெற்றியென்றாலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பஞ்சமி நிலம்:
ஆங்கிலேயர்கள் காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஐே.எச்.ஏ.திரமென்ஹீர் (JHA Tremenheere), பட்டியல் சமூக மக்களின் வாழ்கை நிலையைக் கண்டு அவர்களுக்கு புறம்போக்கு நிலங்களை வழங்கலாம் என ஆங்கிலேய அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 1892ஆம் ஆண்டு, மதராஸ் மாகாணத்தில் உள்ள பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. 4 வருணங்களையும் சேராதவர்கள் என அழைக்கப்பட்ட பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்டதால் இது பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் வாழ்கை தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர், நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் அவற்றில் பெரும்பான்மையான நிலங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனை மீட்க தலித் இயக்கங்கள் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் 80களில் இந்த இயக்கம் வேகமெடுத்தது. இதில், நிகோலஸ் போன்ற களப் பணியாளர்கள், இடதுசாரி கட்சிகளின் பணி மிக முக்கியமானது.
போராட்டத்தில் இருவர் சுட்டுக்கொலை:
1994ஆம் ஆண்டு தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் காரணை என்ற கிராமத்தில் பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில், ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை என்ற இருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பிறகு இந்த இயக்கம் வலுவிழந்தது.
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 115 ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டுமே உள்ளதாக தமிழ்நாடு அரசின் நில ஆவண பதிவுகளில் உள்ளது. ஆனால், இவை 5 முதல் 7 லட்சம் ஏக்கர் வரை இருக்கலாம் என தலித் செயற்பாட்டாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலங்களை கண்டறிந்தும் பயனில்லை:
பஞ்சமி நிலங்களை மீட்க கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் கருப்பையா. இதுவரை போராடி சுமார் 45 ஏக்கர் நிலம்வரை மீட்க உதவியிருக்கிறார். இதுகுறித்து அவர், சாதிய கட்டமைப்பு கொண்ட சமூகத்தில், நிலம்தான் சாதியத்தை தக்கவைக்கும் பொருளாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நிலமிருந்தால் அவர்கள் சாதியக் கொடுமையிலிருந்து வெளியே வர முடியும். நில உடமை அவர்களுக்கு சுயசார்பைக் கொடுக்கிறது, அடக்குமுறையில் இருந்து மீள உதவுகிறது.
பஞ்சமி நிலமாக இருந்தால் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் 10ஏ அடங்கல் என்ற ஆவணத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கும். இதுபோன்ற ஆவணங்களைத் திரட்டுவது, பதிவுத்துறை அலுவலகத்தில் அடங்கலைப் பெறுவது, தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அதிகாரிகளைச் சந்திப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவது என கடுமையான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பல இடங்களில் பஞ்சமி நிலம் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, அரசின் ஆவணக் காப்பகங்களில் இருந்து திட்டமிட்டு பல பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசே பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்கிறார் கருப்பையா.
பஞ்சமி நில மீட்பும் தலித் விடுதலையும்!
பெரும்பாடுபட்டு பஞ்சமி நிலத்தை அடையாளம் கண்டாலும், நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து காலம் கடத்துவதாக செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மேலும், பஞ்சமி நிலங்களை மீட்பதில் அரசியல் நெருக்கடி உள்ளதாகக் கூறும் அவர்கள், அரசியல் கட்சிகளும் இதற்கு குரல் கொடுத்தால் அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்கின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் போன்ற வெகு சிலரே இது குறித்துப் பேசி வருகிறார்கள்.
தலித் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் விவசாயக் கூலிகளாகவும், வறுமையின் காரணமாக கொத்தடிமைகளாகவும் பணியாற்றும் சூழல் நிலவுகிறது. நில உரிமை தலித் மக்களின் விடுதலையில் முக்கியப் பங்காற்றும் என உறுதியாக நம்புகிறார்கள் தலித் சிந்தனைவாதிகள்.
"நிலவுடைமைச் சமூகமாக இருப்பதாலேயே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சில பிரிவினர் சாதிய அடக்குமுறைகளை எதிர்க்கும் தன்மையும், அதற்கு எதிர்வினையாற்றும் தன்மையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்" என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் நிலம் வழங்கப்படும் போது தலித் மக்கள் அதிகாரம் பெறுவதாக அவர் நம்புகிறார்.
பஞ்சமி நிலங்கள் மட்டுமல்லாமல், பூமிதான நிலங்கள், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்கள் ஆகியவற்றையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டாலும், இதுவரை அவை பயனாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு இதனை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தொடர்து போராட்டம் நடந்து வருகிறது.
தொடரும் போராட்டம்:
இது பற்றி நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாவட்டம் வாகரை பகுதியில் உள்ள ஆதி தமிழர் பேரவை மாநில செயலாளர் சுப்பிரமணி, "வாகரைப் பகுதியில் 14.65 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி போடப்பட்ட பட்டாவை ரத்து செய்து, அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதனை தலித் பயனாளிகளுக்குக்கு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக பழனி சார் ஆட்சியர், மற்றும் அப்பகுதி தாசில்தாரிடம் கோரிக்கை அளித்தும் பலனில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய பயனாளர்களிடம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். இருப்பினும் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை" என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் முழுமையான தீர்வு காண பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறுகிறார் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியரும், பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டவருமான ஜெரோம் சாம்ராஜ். இது தொடர்பான தொடர் செயல்பாடு வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
ஒரு சில இடங்களில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், அவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் புகார் முன் வைக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வாகரை பகுதியில் தனது தந்தைக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க போராடி வரும் பழனிவேல் பேசுகையில், 1960ஆம் ஆண்டு முற்பகுதியில் எனது தந்தை காலத்தில் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம், பின்னர் அது பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை திரும்பக் கேட்டத்துக்கு என் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் வழக்கு தொடர்ந்து நிலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது நான் கூலி வேலை பார்த்து வருகிறேன், குடும்பம் வறுமையில் உள்ளது. எங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தில் தண்ணீர் நன்றாக உள்ளது. என்னிடம் அதனைத் திரும்ப ஒப்படைத்தால் அதில் விவசாயப் பணி மேற்கொள்வேன் என்கிறார்.
இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்டம்: இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் கைது!