சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று (பிப்ரவரி 25) பணி ஓய்வுபெற்றார். இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. 2013இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக புஷ்பா சத்தியநாராயணா பதவியேற்றார். இவர் திருவாரூரின் மன்னார்குடியில் 1960ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்தவர்.
1985ஆம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். பின்னர் 28 ஆண்டுகள் உரிமையியல் வழக்குகளில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கு இஎஸ்இ பொருந்தும் என மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு, புஷ்பா சத்தியநாராயணா தலைமை வகித்துள்ளார்.
பணியாற்றியதில் திருப்தி
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரத்தில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளார். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துகளை நீக்கியது, நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனத் தீர்ப்பளித்தது உள்ளிட்ட பரபரப்பான வழக்குகளையும் இவர் கையாண்டுள்ளார்.