சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்த உதவி ஆய்வாளர் மணி, 2004ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின்பும் குடியிருப்பைக் காலி செய்யாமல் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனால், குடியிருப்பை காலி செய்துவிட்டு, வாடகை பாக்கிய செலுத்தும்படி அறிவுறுத்தி, அம்பத்தூர் தொழிற்பேட்டை மேலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.அதன்படி வீட்டை காலி செய்வதை விடுத்து, நோட்டீசை எதிர்த்து மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
14 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் 15 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் இருப்பதாக தொழிற்பேட்டை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்த போது, மணி ஓய்வு பெற்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என பரங்கிமலை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.