சென்னை:தமிழ்நாட்டிற்கான தனிக்கல்விக் கொள்கை உருவாக்குவது குறித்து பேராசிரியர் ஜவஹர் நேசன் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது எனவும், இதில் அதிகாரிகள் தலையிட்டு தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநில கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் எனக் கூறவில்லை எனவும், கொள்கை வடிவமைப்பதற்காக பெறப்பட்ட கருத்துருக்கள் மீது குழுவின் உறுப்பினர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநில கல்விக் குழு தலைவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியுமான முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டிற்கான தனிக்கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க அரசு 2022 ஜூன் மாதம் ஒன்றாம் தேதி உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஓர் ஆண்டாக கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான பணிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் முதல் கூட்டம் 2022 ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றன.
அந்தக் கூட்டத்தில் குழு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2022 செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஒவ்வொரு மண்டலத்திலும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பல தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சங்கங்கள், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் கருத்துகள் பெறப்பட்டன.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள பிரச்னைகளை ஒவ்வொரு பிரிவு ரீதியாக கேட்டறிந்தனர். மேலும் சமூக நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு கிராமம், வட்டாரம், மாவட்டம் என அனைத்து தகவல்களும் புள்ளி விவரங்களாகப் பெறப்பட்டன. மேலும் அரசுத் துறைகளில் மாநில அளவிலான செயலாளர்கள் வரை அளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்களிடம் மண்டல அளவில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் மீதான தகவல்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டன. மேலும் குழுவின் உறுப்பினர்களால் சுமார் 200 நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டு பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களில் துணைக் குழுக்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
மேலும் குழுவில் உறுப்பினர்களிடமிருந்து இதுவரை பெறப்பட்ட கருத்துகள் குறித்த விவாதத்தை மே 4ஆம் தேதி குழு தொடங்கியது. மேலும் ஜூன் 6-ம் தேதி வரை 11 முறை குழு விவாதிக்கத் திட்டமிட்டு இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டம் ஆரம்ப நிலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஜவகர்நேசன் மே 10ஆம் தேதி மின்னஞ்சலில் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் மீது செயல்பாடுகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டுகள் உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது.