சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும் வழக்குத் தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும், முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பன்பட்டுவைச் சேர்ந்த ராஜ் கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதி என்பது இன்னமும் தொலை தூர கனவாக உள்ளதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிர விசாரணை எதுவும் நடத்தவில்லை என்றும், கண்துடைப்பாக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும்; இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.