சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பள்ளி மாணவர்கள், 23 ஆயிரத்து 747 தனித் தேர்வர்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் தேர்வு மையத்திற்குள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
இதன்படி, “தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போன் கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வர்களது செல்போன் பராமரிப்பிற்கு, தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அது மட்டுமல்லாமல் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். இந்த குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும்.
தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள், கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து, அதனை தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தால், அவர்கள் முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவர். தேர்வர் இந்த தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால், அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். இருப்பினும், அடுத்து வரும் தேர்வுகளை எழுத அவர்களுக்கு தடையில்லை.