கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்த அவதூறான விமர்சனங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலை நிர்வகித்து வந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வெறுப்பு பரப்புரை தொடர்ந்து நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுளையும் அவமதிப்பு பேசி வருகின்றனர். தனி நபர்கள் சிலருடைய பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகள் மக்களிடையே மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகிறது.
வன்முறையை தூண்டும் ஆபாச பேச்சுகள் அடங்கிய செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட, விதிகள் வகுத்துள்ள போதும் இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருவதை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
2018ஆம் ஆண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில சைபர் கிரைம் காவல்துறையினரை வலுப்படுத்த, மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும் அந்த விதிகளை பின்பற்றியிருந்தால் இதுபோன்ற சட்ட விரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும். கந்தசஷ்டி கவசம் தொடங்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:சிறுமியை வன்புணர்வு செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு!