சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து ஷிவானி உள்ளிட்ட சில மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்குத் தொடரப்பட்டது.
அதில், தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. எனவே, இதனை ரத்துசெய்ய வேண்டும், இது தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.