தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ரீயூனியன்’ தீவில் உள்ள செயிண்ட் டெனிஸ் - சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம் - விமான சேவை

புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ‘ரீயூனியன்’ தீவில் உள்ள செயிண்ட் டெனிஸ் - சென்னை இடையேயான விமான சேவைகள் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்கியது.

சென்னை விமானநிலையம் வந்தடைந்த ஏர்ஆஸ்ட்ரல் விமானம்
சென்னை விமானநிலையம் வந்தடைந்த ஏர்ஆஸ்ட்ரல் விமானம்

By

Published : May 7, 2022, 7:53 PM IST

சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்தாகின. அதில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத் தளமான ‘ரீயூனியன்’ என்ற குட்டி தீவிவான செயிண்ட் டெனிஸிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஏர்ஆஸ்ட்ரல் விமானம சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சென்னை வந்து, மறுநாள் சனிக்கிழமை மீண்டும் செயிண்ட் டெனிஸ் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்த குட்டி தீவில் மொத்த மக்கள் தொகையே 1.5 லட்சம் தான். ஆனால் இது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளம். இங்கு புகழ்பெற்ற கோயில்கள், மீயூசியம் மற்றும் கோடை வாசஸ்தளங்கள் இருப்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவு இங்கு சென்று வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக வா்த்தக தளமாகவும் உள்ளது. அங்கு உள்ளவர்களில் கணிசமாக தென் இந்தியர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளனர். எனவே சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த வாராந்திர விமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல், 26 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது.

இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் கரோனா பெருமளவு குறைந்து சகஜநிலை திரும்பியதால் மீண்டும் இந்த விமான சேவையை தொடங்க ஏர்ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் விரும்பியது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் அதற்கு அனுமதியளித்தது.

அதன் பேரில் 26 மாதங்களுக்கு பின்பு, முதல் விமானம் நேற்றிரவு (மே 06) 7 மணிக்கு 47 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் செயிண்ட் டெனிஸ்சிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் சென்னையில் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடத்தொடங்கியதும், ஓடுபாதையின் இரண்டு பகுதியிலும், 2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சி அடித்து, "வாட்டர் சல்யூட்" கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். 26 மாதங்களுக்கு பின்பு இந்த விமானம் மீண்டும் இயங்க தொடங்கிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானம் வழக்கம் போல், இன்று (மே 07) காலை 7:10 மணியளவில் மீண்டும் சென்னையில் இருந்து ரீயூனியன் தீவில் உள்ள செயிண்ட் டெனீஸ்க்கு 62 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமான சேவை இனிமேல் வழக்கம்போல் வாராந்திர விமான சேவையாக தொடர்ந்து இயங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஸ்பைஸ் ஜெட் விமானம் குலுங்கிய சம்பவம் - குழு அமைத்து தீவிர விசாரணை...!

ABOUT THE AUTHOR

...view details