சென்னை:சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நவம்பர் மாதத்திற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (நவ.29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகள், அம்மா உணவகம், மழைநீர் வடிகால் பணிகள், மேலும் மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்துவும் கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, இக்கோரிக்கைகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாமன்ற கூட்டத்தில் சிரிப்பலை:நேரமில்லா கேள்வி நேரத்தில், பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டில் இருக்கும் பிரச்னைகளை குறித்து பேசினர். அப்பொது, பெருங்குடி மன்ற தலைவர் எஸ்.வி.ரவசந்திரன் வாய்ப்பு வரும்போது பேசுகையில், 'சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள், 15 மண்டலங்கள் இருக்கின்றன. மாநகராட்சி சம்பந்தமான பணிகள், மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு வசதியாக நிலைக்குழுத் தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் சொந்தமாக கார் வழங்க வேண்டும் என நியாயமான கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களுக்கு கார் இதுவரை கிடைக்கவில்லை; அதற்கு பதிலாக, அனைவரும் பைக் கொடுக்கலாம் என்றும், அதுவும் இல்லையெனில், பெண் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பெண்கள் ஓட்டக்கூடிய இ-பைக் வழங்க வேண்டும்' என்று கேட்டார். இதனால், மாமன்ற கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
மாமன்ற உறுப்பினருக்கு தீடிர் மயக்கம்:பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் நடைபெற்ற போது, 14வது வார்டின் மாமன்ற உறுப்பினர் பானுமதி என்ற பெண் கவுன்சிலருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால், இதனைத்தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் குடும்பத்தார் கூறுகையில், 'காலை முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இன்று நீண்ட நேரம் நடைபெற்றதால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக வீட்டில் இருக்கிறார்' என தெரிவித்துள்ளனர்.