இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டதை மையப்படுத்தி, அந்த மதத்தின் மீது வெறுப்பை, காழ்ப்பைத் தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. அப்படி நடந்துகொள்வோரின் நடவடிக்கையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
கரோனா நோயை ஆணிவேரோடு வீழ்த்தி, மக்களை வாழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு, இனம், மதம், மொழி, ஜாதி, கட்சிகளைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், அரசுகளுடன் கைக்கோர்த்து செயல்பட்டுவருவது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றே. ஒரு பொறுப்பு வாய்ந்த மத்திய அமைச்சர் ‘தப்ளிக்’ மாநாட்டை நடத்தியவர்களை தலிபான்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதுதானா? தமிழ்நாடு பி.ஜே.பி.யின் புதிய தலைவர் இந்தப் பிரச்சினையில் மதக்கண்ணோட்டம் தேவையில்லை என்று கூறியிருப்பது பாராட்டத்தக்கதே ஆகும்.