இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 15 விழுக்காடு இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கென வழங்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் மோசடி நடந்திருப்பதாகவும் வில்சன் கூறியுள்ளார்.
தொடர்ந்து இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வில்சன், ”இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பேசியுள்ளேன். மத்திய சுகாதார அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் கடிதத்தில் ’இடஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் மாநிலத்திலேயே தனியாகச் சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசை பொறுத்தவரை 1994ஆம் ஆண்டு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்படும் அகில இந்திய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்கின்ற அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது சமூகநீதிக்கு எதிரானது. எனவே இதனை உடனடியாக தடுக்க மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் முயற்சி எடுக்க வேண்டும். இதனால் இடம் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.