சென்னை: சென்னை: சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 168, 169, 170, 172 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; “23.7.2009 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டமானது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.43 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரால் 2022ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி (ஆண்டுக்கு ரூ.1,546 கோடி) இத்திட்டத்தின் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனைகள் 853, தனியார் மருத்துவமனைகள் 969 என மொத்தம் 1,822 மருத்துவமனைகள் இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளும், 8 சிறப்பு அறுவை சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும், 11 தொடர் சிகிச்சை முறைகளும் உள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உள்ள 1.43 கோடி குடும்பங்களுக்குள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் சமூக, பொருளாதார, சாதி வாரியாக 86,48,748 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளனர்.