சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு, 400 ஆண்டுகள் பழமையான பெண் சிலை ஒன்று தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகராஜ் மற்றும் குமரவேல் ஆகிய இருவரிடம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிலையை வாங்குபவர்கள் போல, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவர்களிடம் பேசியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின்னரே சிலை கடத்தல் காவல்துறையினரை, கடத்தல் கும்பல் நம்பியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த முஸ்தபா என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிலைக்கு இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது.
பின்னர், சுமார் 400 வருடம் பழமையான ஐம்பொன் பெண் சிலையுடன் முஸ்தபா உட்பட மூன்று பேர் பழைய திருச்சி ரோடு அருகே வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.