சென்னை: மிக்ஜாம் புயலினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள், சாலைகள், குடியிருப்புகள் அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகின. மேலும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடைவிடாமல் இரண்டு நாளாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முக்கிய சாலைகளில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து விலகிச் சென்றதால் இன்று(டிச.5) காலை முதல் சென்னையில் பரவலாக மழை இல்லை. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் படிப்படியாக குறைந்து வருகின்றன சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை என்றாலே அதிகம் பாதிப்பு உள்ளாகும் மேற்கு தாம்பரத்தை ஒட்டிய முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், PTC கோட்ரஸ், அமுதம் நகர், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மழை நீருடன் சேர்ந்து அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளநீரும் புகுந்ததால் அப்பகுதியே தீவு போல் காட்சாளிக்கின்றன. குறிப்பாக முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பநகர், அமுதம் நகர், பிடிசி கோட்டரஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு பல இடங்களில் வீட்டின் தரை தளம் மூழ்கி ஏரி போல் காட்சியளிக்கிறது.