தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான 13ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. எனவே, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு, பல்வேறு படிகள், பணி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர், செயலர் இளங்கோவன், குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள், தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 67 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.