இதுகுறித்து செய்தியாளர்களிடம் சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்ததாவது,
"இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருகிறது. மாநில மக்களின் மருத்துவத் தேவைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதில் உச்ச நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது.
மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 14 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்களும், 1,922 முதுநிலை மருத்துவ இடங்களும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களும் உள்ளன. தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தான், இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மருத்துவ இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிகமான மருத்துவ இடங்கள் இருந்த போதிலும், அவற்றை முழுமையாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெற முடியவில்லை. வேறு மாநிலத்தவர் அதிக இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை உள்ளது. அதற்கு அகில இந்தியத் தொகுப்பு முறை காரணமாக உள்ளது. இளநிலை மருத்துவ இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டையும் அகில இந்திய தொகுப்பிற்கு நாம் அளித்து வருகிறோம். அகில இந்திய தொகுப்பில் தமிழ்நாடு மாணவர்கள் நாம் வழங்கும் அளவிற்கு இடங்களைப் பெறுவதில்லை.
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்குமான கலந்தாய்வை அரசே நடத்தி வந்தது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டும் தான் சேர்ந்து படிக்க முடியும். வேறு மாநிலத்தவர்கள் சேரமுடியாது. உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு, அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் படித்து முடித்த பின் பணிமூப்பு அடையும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள், உயர் சிறப்பு மருத்துவர்களின் சேவையை இலவசமாக பெற முடிந்தது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு திணித்தது. அது மட்டுமன்றி உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தும் உரிமையும், மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையும் மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நீட்டிலிருந்து விலக்கு பெற மசோதாவை கூட சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமன்றி உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீடும், உச்ச நீதிமன்றத்தால் ரத்தானது.