சென்னை: பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் எப்போது வழங்கப்படும் என்பதை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து உழைப்பு சுரண்டலில் ஈடுபடக்கூடாது என மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு சிறப்பு பேட்டியளித்தார். அதில், கல்வி கொடுக்கக்கூடிய நிறுவனங்களில் முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். உலகம் முழுவதும் கல்வி முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கல்ல. அரசும் கல்விக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. கல்வி குறித்து மிகப்பெரிய புரிதல் இருப்பது போல், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வைத்து வருகின்றனர். ஆனால், இங்கு ஆசிரியர்கள் எவ்வாறு நடததப்படுகின்றனர் என்பதை யாரும் யோசிக்கிறோமா? என்றால், இல்லை என்பதே உண்மை.
10 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நிரந்தர ஆசிரியர்கள் என்பது குறைந்துக் கொண்டே வருகின்றனர். கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு பள்ளிகளில் 16,540 ஆசிரியர்களை 2012 ஆம் ஆண்டு நியமித்த அரசு ஆணையானது, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்களாக வரையறை செய்தது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும் 5 ஆயிரத்தில் ஆரம்பித்த அவர்களது ஊதியம் இன்று பத்தாயிரத்தை தாண்டவில்லை. ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டும் என பல்வேறுப் போராட்டங்களை நடத்தியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யபடவில்லை. மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளமும் கிடையாது. பதினோரு மாதங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பல ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்திற்கான வருமானம் ஈட்ட முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.