இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாள்களில் சத்துணவுக்கு உரிய அரிசி மற்றும் பருப்பு வகைகளை உணவுப் பொருள்களாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலோட்டமாக இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வரவேற்கக்கூடியதாக தான் தோன்றும். ஆனால், நடைமுறையில் இந்த யோசனை தவிர்க்கப்பட வேண்டியதாகும். அங்கன்வாடி குழந்தைகள் முதல், உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவு, அதற்குரிய முட்டையும் வழங்குவதுதான் சரியானது, சிறந்தது. இதனை நடைமுறைப்படுத்த சிரமங்கள் தோன்றலாம், அரசு நினைத்தால் முடியும் என்பதே உண்மை.
தற்போது, கரோனா நோயைக் கண்டு பதற்றம், பயம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், அனைத்து பணிகளிலும் முடக்கம், சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவும் மார்ச் 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மாற்று வழி மூலம் சத்துணவு வழங்கியிருக்க வேண்டும், தவறிவிட்டது. சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவின்றி பரிதவிக்கின்றனர். நோய்த்தொற்று பரவாமலிருக்க ஊட்டச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம் என்பது இன்றுள்ள சூழலில் தேவை.