ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரது உடலை சென்னை அம்பத்தூரில் உள்ள மின்மயானத்தில் எரிக்க முற்பட்டபோது, மின் மயானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு பொருள்களின்றி எரிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றியுள்ள பொதுமக்களும் மருத்துவர் உடலை மின் மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது போன்று கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அவர்களை மின் மயானங்களில் எரிக்க பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருப்பதாக, காவல் துறையினருக்குப் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.
இதனையடுத்து சென்னை முழுவதும் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களை எரிப்பதற்குத் தனியாக ஒரே ஒரு மின் மயானத்தை ஒதுக்க வேண்டுமென பல்வேறு காவல் துறையினரின் தரப்பிலிருந்து உயர் அலுவலர்களுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.