சென்னை:உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஆயிரத்து 890 தமிழ்நாடு மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம், போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள், இங்கு காலியிடங்கள் உள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதுகுறித்து, சென்னையிலுள்ள வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவன மேலாண்மை இயக்குநர் சுரேஷ்குமார் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக 20 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் நாடு திரும்பினர். அதில், சுமார் 2 ஆயிரம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள்.
இவர்கள் அனைவரும் மீண்டும் படிப்பை தொடரும் வகையில், மத்திய அரசு குழு அமைத்து, அதன் மேற்பார்வையில் சேர்க்கையை நடத்த வேண்டும். உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்பிற்கு கட்டணம் குறைவு. அதேபோல மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.
அதேபோல ரஷ்யா, கிர்கிஷ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிப்பை தொடர முடியும். மாணவர்கள் விரும்பினால் வேறு கல்லூரிக்கு மாறிச் சென்று படிக்கலாம். இதற்கான நடவடிக்கை அரசு எடுத்தால் செலவு குறைவாக இருக்கும். ஏனென்றால், கிழக்கத்திய ஐரோப்பா நாடுகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.