சென்னை : தமிழ்நாட்டில் பல்வேறு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், தற்போதுதான் கரோனா தொற்று பரவலின் விகிதம் ஓரளவு குறைந்துள்ளது. இதே நிலையே மீண்டும் தொடரும் எண்ணத்தில், அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் கரோனா பரவல் காரணமாக வேலைக்கு வரவேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் 55 வயதுடைய பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தற்போது 45 வயது உடையவர்களும் பணிக்கு வர வேண்டாம் என பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்கள் அறிவுறுத்துவதாக தகவல்கள் வெளிவருகின்றன. திருச்சி மாவட்டம் செங்காட்டுப்படி கிராம பஞ்சாயத்திலும் 45 வயதை எட்டிய பெண்களுக்கு பணிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையை தவிர மீதமிருக்கும் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரவுகளின்படி 90.38 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து, வேலைக்கான அடையாள அட்டையை வைத்துள்ளனர். தினந்தோறும் சராசரியாக 88.62 லட்சம் பேர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 45 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரே ஆகும். கரோனா கால கட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாயே குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால், தற்போது இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளதால், பொருளாதாரா ரீதியாக பாதிப்படைந்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பணி செய்ய விடாமல் தடுப்பதனால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, பலர் நமது செய்தியாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றை கீழே காண்போம்.
கோமதி, துறையூர்: எனக்கு வயது ஐம்பது. எனது கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ஊழியர்கள் என்னை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தற்போது அரசு அறிவித்துள்ளதன்படி என்னுடைய வயதுக்கு வேலை கிடையாது என கூறுகின்றனர்.
அயிலை சிவசூரியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர்: தமிழ்நாடு அரசு 55 வயதுக்கு மேற்பட்டவர்களை உடனடியாக இத்திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.